வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் இரத்தக் கறை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என உறவினர்கள் அடையாளம் கூறியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி புதுவருட தினத்தன்று, அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு காணாமல் போயிருந்த நிலையில், 16ஆம் திகதி மாலை பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அவர் வீதியில் நின்றபோது, தனது கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞரிடம், சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் அங்கு இறங்க வேண்டுமென கோரியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, அவர் உண்மையாகவே பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பின் அவரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இரத்தக் கறை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, இது ஒரு திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அவர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments